Sunday, 1 December 2013

வியர்க்குருவை விரட்ட வெள்ளரி....!

ஒருவருக்கு வியர்த்தல் என்பது ஆரோக்கியமான நிகழ்வே. ஆனால், தற்போது கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால், பெரும்பாலானவர்கள் வியர்க்குரு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். முதுகு, கழுத்து அல்லது தலை போன்ற பகுதிகளில் தோன்றும் வியர்க்குருக்கள் அரிப்பை உண்டாக்கும்.

* கோடை காலத்தில் வியர்க்குரு தோன்றாமல் இருக்க அடிக்கடி குளிக்க வேண்டும். குளிக்கும் போது மூலிகையினால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்துவதே சிறந்தது.

* வெள்ளரிக்காயை வெட்டி, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 முதல் 20 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறைகள் செய்யலாம். இதை வியர்க்குரு மறையும் வரை தொடர்ந்து செய்யலாம்.

* சோற்றுக் கற்றாழை ஜெல்லை, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்தால், நாளடைவில் குணமாகும்.

* வியர்க்குரு தோன்றியுள்ள பகுதிகளில், சாமந்தி பூவின் சாறு தடவினால் குணமடையும். சாமந்தி பூவை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட பவுடர்கள் மற்றும் ஆயின்மென்ட் போன்றவையும் கடைகளில் கிடைக்கின்றன.

* அதிக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அதிக நறுமணம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவதை தவிர்ப்பதே நல்லது.

பொடுகு தொல்லையா?



* தேங்காய் பால் - 1/2 கப், எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீளமாக வளரும்.

* அருகம்புல்லில் சாறு எடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.

* வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு குளித்து வந்தால் பொடுகு நீங்கும். சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்துக் குளித்தால் நல்லது.

* வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டித் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.

* பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதுடன் கண்டிஷனராகவும் இருக்கும். மேலே கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திப் பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறுங்கள்.

ஷாம்பு தலைக்கு போடுவது அவசியமா?



இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் தலையை சுத்தமாக வைத்து இருக்கும். ஷாம்பு போட அவசியமே இல்லை. சொல்லபோனால் ஷாம்பு அந்த ஆயிலை தலையில் இருந்து அகற்றிவிடுகிறது.

மேலும் ஷாம்பு, கண்டிஷனரில் உள்ள கெமிக்கல் குப்பைகளை என்ன செய்வது என்பது நம் முடிக்கு தெரிவது இல்லை. முடி வெட்டியபிறகு தலைக்கு குளிக்க வேண்டும் எனில் பின்வரும் இயற்கை ஷாம்புவை பயன்படுத்தலாம்.

1) தண்ணீர்: தலையில் நீரை விட்டு முடியை மசாஜ் செய்தாலே போதும். ஐந்து நிமிட மசாஜ் முடியை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து இருக்கும்.

2) முட்டை: முழு முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து கொள்ளுங்கள். இதை தலையில் ஊற்றி ஓரிரு நிமிடம் காத்திருந்து தலையை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். குளிர்ந்த நீரில் மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டும். இது அளிக்கும் புத்துணர்வை எந்த ஷாம்புவும் அளிக்க முடியாது.

கண்டிஷனர் வேண்டுமா?

எலுமிச்சை ஒன்றை நேரடியாக தலையில் பிழிந்து சிறிது நீர் விட்டு மசாஜ் செய்யுங்கள். அல்லது லெமன் ஜூஸை நீரில் கலந்து கண்டிஷனராக பயன்படுத்துங்கள். இப்படி வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும்.

பவுடர் ஃபவுன்டேஷனை பயன்படுத்து முறை


பவுடர் ஃபவுன்டேஷன் என்பது நாம் உபயோகப்படுத்தும் பவுடரை போன்றது. ஆனால் சற்று இறுகிய நிலையில், இன்னும் தரமுள்ள மேக்-கப் சாதனமாக உள்ளது.பவுடர் ஃபவுன்டேஷன் நான்கு வகைப்படும். க்ரீம்-பவுடர் ஃபவுன்டேஷன், லிக்விட்-பவுடர் ஃபவுன்டேஷன், மினரல் பவுடர் ஃபவுன்டேஷன் மற்றும் பிரஸ்ட் பவுடர் ஃபவுன்டேஷன் ஆகிவைகள் தான்.

இவை அனைத்துமே சாதாரண சருமம், எண்ணெய் பசையுள்ள சருமம் மற்றும் கலவையான சரும வகைகளில் நன்றாக செயல்படும். பல பெண்கள் அதை பயன்படுத்தினாலும், அதை முறையாக பயன்படுத்த பலருக்கும் தெரிவதில்லை. இப்போது பவுடர் ஃபவுன்டேஷனை முறையாக பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்......

முதலில் மிதமான க்ளின்சரைப் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இது முகத்தில் உள்ள அனைத்து அழுக்கையும், எண்ணெயையும் நீக்கும். பின் டோனரை பயன்படுத்தி சருமத்தை நிறம்பதப்படுத்துங்கள். ஏனெனில் கழுவி நிறம்பதப்படுத்தப்பட்ட முகத்தில் தான் ஃபவுன்டேஷன் செய்ய வேண்டும்.

பின்பு சரியான மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தி சருமத்தை மேம்படுத்த வேண்டும். இதனால் மாய்ஸ்சுரைசர் சருமத்தை பாதுகாக்கும் அடுக்காக இருக்கும். அதனால் ஈரப்பதம் வெளியேறாமல் சருமத்திலேயே இருக்கும். மேலும் காய்ந்த திட்டுகள் ஏதும் இருந்தால் கூட, அவைகளையும் இது நீக்கிவிடும்.

முக்கியமாக அதனை சருமத்தின் மீது குறைந்தது 3 நிமிடங்களாவது ஊற விட வேண்டும். சருமத்தில் உள்ள எந்த ஒரு குறைபாடாக இருந்தாலும் சரி, கன்சீலரை பயன்படுத்தி அதை மறைத்திடவும். பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை மறைக்க, சற்று அடர்த்தியான கன்சீலர்களை பயன்படுத்தவும்.

அதிலும் பயன்படுத்தும் கன்சீலர்களானது சரும வகைக்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். கன்சீலரை நேரடியாக பயன்படுத்தும் போது, மேக்-கப் போடும் சிறிய பிரஷை பயன்படுத்தி போட வேண்டும். பவுடர் ஃபவுன்டேஷனை முழுமையாக செய்து முடிக்க, ஒரு மேக்-கப் ஸ்பாஞ்சை பயன்படுத்தி, பவுடர் ஃபவுன்டேஷனை தடவ வேண்டும்.

இதற்கு ஒரு ஃபவுன்டேஷன் ப்ரஷும் தேவைபடும். ஆனால் பவுடர் ஃபவுன்டேஷனை தடவிய பின் எக்காரணத்திற்காகவும் விரல்களை பயன்படுத்தக் கூடாது. முதலில் ஸ்பாஞ்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஃபவுன்டேஷனில் வைத்து ஒத்தி எடுக்கவும். ஒத்திய ஸ்பாஞ்சை முகம் முழுவதும் தடவ வேண்டும்.

அதிலும் நெற்றி, மூக்கு மற்றும் நாடியிலும் தடவலாம். ஒருவேளை பிரஷ் பயன்படுத்துவதாக இருந்தால், பிரஷை பவுடர் ஃபவுன்டேஷனில் நன்றாக சுழற்ற வேண்டும். பின் பிரஷில் இருக்கும் அதிகப்படியான பவுடரை உதறி விட வேண்டும். பின்பு முகத்தின் மீது வட்ட வடிவ இயக்கத்தில் மெதுவாக தடவ வேண்டும்.

பிறகு ஆங்கில எழுத்து 'S'-ஐ போல், கீழ்நோக்கி ஃபவுன்டேஷனை தடவ வேண்டும். பவுடர் ஃபவுன்டேஷன் செய்யும் போது, கவனமான முறையில் கலவை இருக்க வேண்டும். பின் நெற்றியில் ஆரம்பித்து முகம் முழுவதும் தடவியிருக்க வேண்டும். ப்ளென்டிங் செய்யும் போதும் வட்ட வடிவில் இயக்க வேண்டும்.

முக்கியமாக தடங்களோ, கோடுகளோ தெரியாத படி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பயன்படுத்தும் ஃபவுன்டேஷன், சருமத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். குறிப்பாக பவுடர் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் முகம் பார்ப்பதற்கு செயற்கையாக காட்சி அளிக்கும்.

பற்கள் அழகை பாதுகாக்க

அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.

பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் ஒரு சில வீட்டுப்பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச் சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்ன வென்று பார்க்காம்.

• எலுமிச்சை எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

• பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

• பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

• அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.

• அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.

• ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

• ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

• பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.

• பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.

சரும அழகிற்கு குளியல் பொடி



இன்று பல சோப்புகளாலும, பவுடர்களாலும் உடலில் அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாதாலும் சருமம் வறட்சியடைகின்றது.

சரும பாதிப்புகளுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கின்றது. குளியல் பொடி தயாரிக்க

தேவையான பொருட்கள்...

சோம்பு - 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
வெட்டி வேர் - 100 கிராம்
அகில் கட்டை - 100 கிராம்
சந்தனத் தூள் - 150 கிராம்
கார்போக அரிசி - 100 கிராம்
தும்மராஷ்டம் - 100 கிராம்
கோரைக்கிழங்கு - 100 கிராம்
கோஷ்டம் - 100 கிராம்
ஏலரிசி - 100 கிராம்
பாசிப்பயிறு - 250 கிராம்
காய்ந்த ரோஜா இதழ் - 200 கிராம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக காய வைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த குளியல் பொடியை தினமும் குளிக்கும் போது தேவையான அளவு எடுத்து நீரில் குழைத்து உடல் முழுவதும் பூசி 20 ஊற வைத்து இளம் சூடான நீரில் குளிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து குளித்து வந்தால் தேமல், கண்களில் கருவளையம், முகப்பரு, போன்ற பிரச்சனைகள் தீரும். மேலும் உடல் முழுவதும் நறுமணம் வீசத் தொடங்கும்.

இரண்டே நாளில் இப்படி அழகாகலாம்


முக்கியமான நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ளவேண்டும். ஆனால் இரண்டே நாட்கள்தான் இருக்கின்றன. அதற்குள் உங்களை நீங்கள் அழகுபடுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? இருக்கிறது. இரண்டு நாட்கள் போதும், உங்களை நீங்கள் சூப்பராக அழகாக்கிக்கொள்ள..! வீட்டிலே அதை செய்துவிடலாம்..!

சருமத்திற்கு:

வறண்ட சருமம் உங்களுக்கு பிரச்சினையாக இருந்தால் உடல் முழுவதும் ‘லிக்யூட் சோப்’ பூசி, ‘பாடி ஸ்கிரப்’ பயன்படுத்தி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின்பு நிறைய தண்ணீர் ஊற்றி, நன்றாக கழுவிவிடுங்கள். சருமத்திற்கு பளபளப்பு கிடைக்கும்.

அழகான விழிகளுக்கு :

டீ பேக் ஒன்றை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள். பின்பு அதை எடுத்து நன்றாக குளிரவையுங்கள். அதை கண்களை மூடிக்கொண்டு, கண் மீது எல்லா இடங்களிலும் படும்படி பத்து நிமிடங்கள் வையுங்கள்.

தேயிலையில் அடங்கியிருக்கும் கபீன், கண் இமைப் பகுதிகளை அழகாக்கி, கண்களை ஜொலிக்கவைக்கிறது. கண்களில் இருக்கும் வீக்கங்களை அகற்றி பளிச்சிடச்செய்யும். நன்றாக தூங்காவிட்டால் கண்களின் அடியில் கறுப்பு நிறம் படியும். அதையும் நீக்கும் சக்தி, டீபேக்கிற்கு இருக்கிறது.

முகப்பரு நீங்க :

பளிச்சென இருக்கும் முகத்தில் பருக்கள் தோன்றி நிறைய பெண்களின் தன்னம்பிக்கையை குறைக்கிறது. அதற்கும் பரிகாரம் இருக்கிறது. ஒரு ஐஸ் கியூப்பை மஸ்லின் துணியில் பொதிந்து மூன்று நிமிடங்கள் முகப்பரு மீது வைத்திருங்கள். பின்பு துணியில் இருந்து ஐஸ் கியூப்பை நீக்கிவிட்டு, அந்த துணியை லாவண்டர் ஆயிலில் முக்கி, பரு மீது வையுங்கள். இவ்வாறு செய்தால், பாக்டீரியா இன்பெக்ஷன் நீங்கி, இரண்டு நாட்களில் முகப்பரு மறையும்.

கூந்தல் அழகுக்கு :

நீங்கள் விருந்து நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முதல் நாளே உங்கள் முடிக்கு ஏற்ற தரமான ஷாம்புவும், கண்டிஷனரும் பயன்படுத்தி தலையை நன்றாக கழுவுங்கள். நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு தலைக்கு குளித்து, 'பேன்' கீழே நின்று கூந்தலை நன்றாக உலர வையுங்கள்.

பின்பு கூந்தலை பல பாகங்களாக பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் ‘ப்ளோ டிரை’ செய்யுங்கள். இறுதியில் முடியின் இறுதிப்பகுதியில் ஹெயர் வாக்ஸ் பூசுங்கள். இதன் மூலம் முடி உடைந்து போன அழகு குறைபாடு நிவர்த்தி செய்யப்படும். அழகும், ஜொலிப்பும் கூந்தலுக்கு இதன் மூலம் கிடைக்கும்.

பாதங்களுக்கு :

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களில் பெட்ரோலியம் ஜெல்லி பூசி, சாக்ஸ் அணிந்துகொண்டு தூங்குங்கள். மறுநாள் பாதங்களுக்கு மென்மையும், அழகும் கிடைக்கும்.

மேக்-அப் நிலைத்திருக்க:

முகத்தில் பவுண்ட்டேஷனும், காம்பேக்ட் பவுடரும் பயன்படுத்திய பின்பு அதில் சிறிதளவு தண்ணீர் ஸ்பிரே செய்து, டிஸ்யூ பேப்பர் வைத்து ஒற்றி எடுத்தால், மேக்-அப் அதிக நேரம் நிலைத்திருக்கும். லிப்ஸ்டிக் அதிக நேரம் நிலைத்திருக்க, உதடுகளில் கண்சீலர் போட்ட பின்பு லிப்ஸ்டிக் போடுங்கள். நெயில் பாலீஷ் இளகிப்போகாமல் இருக்க, அதன் மேல் கிளீயர் கோட் ஒன்று கொடுங்கள்.